×

முகக்கவசங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு என்ன மாதிரியான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன? மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: முகக்கவசங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு என்ன மாதிரியான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன? என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ரமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செயதார். அந்த மனுவில், கொரொனோ வைரஸ் தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியது. இதனடிப்படையில், 3 லேயர் மாஸ்க், n95 மாஸ்க், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மாஸ்க், காட்டன் மாஸ்க் மற்றும் வெட்டி வேரால் செய்யப்பட்ட மூலிகை மாஸ்க் வரை பல மாஸ்க்குகள் விற்கப்படுகின்றன.

இதுமட்டுமல்லாமல் தங்களுடைய முகங்கள் போல் மாஸ்க்கில் அச்சிட்டு அதை பயன்படுத்தும் வகையிலும் மக்களை கவரும் வகையிலும் பல விதமான மாஸ்க்குகள் அறிமுகமாகியுள்ளன. ஆனால் எந்த முகக்கவசங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும், அதன் விலை, தரம் மற்றும் உற்பத்தி செய்யும் நிறுவனம், முகக்கவசம் காலவதியாகும் தேதி போன்ற எந்த விதிகளையும் மத்திய, மாநில அரசுகள் இது வரை உருவாக்கவில்லை. இதன் காரணமாக பல வண்ணங்களில் சாலைகளில் திறந்தவெளியில் மாஸ்க்குகளை விற்கிறார்கள். இதை வாங்கும் மக்களுக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே எந்தெந்த முகக்கவசத்தை எந்தெந்த வயதினர் அணிய வேண்டும், உற்பத்தி, விலை, தரம், காலாவதி காலம் உள்ளிட்டவை குறிப்பிட்டு முகக்கவசத்திற்கான விதிமுறைகளை வெளியிடும் வரை முகக்கவசம் அணியாமல் செல்பவரிடம் அபராதம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

முகக்கவசத்தை பயன்படுத்திய பின்னர் அதை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் அனைவருக்கும் காப்பீடு செய்ய வேண்டும், என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முகக்கவசம் தயாரிப்பது தொடர்பாக உற்பத்தி நிறுவனங்களுக்கு என்னென்ன விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்று மத்திய, மாநில அரசுகள் 2 வாரத்தில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், முகக்கவசம் அணிவது மற்றும் அதனை பாதுகாப்புடன் அப்புறப்படுத்துவது பற்றி பொதுமக்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ள நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.



Tags : facemask product company ,Central ,Governments ,State ,High Court ,State Governments , Face cover, product company, regulations, central, state government, high court
× RELATED திருப்பூரில் ஆதரவற்று சுற்றித்...